breakfastlunchdinner

Wednesday, October 1, 2008

மைக்ரோ அவனில் காபி

மைக்ரோ அவனில் காபி சூடு செய்தால் சுவையா
இருக்குமா என்று முத்துலெட்சுமி கேட்டிருந்தார்.
அவருக்காக இந்தப் பதிவு.

மைக்ரோ அவனில் காபி கலந்தால் அதன்
சுவையே வேறு. நல்ல மணமாகவும் இருக்கும்.


ஃபில்டர் காபி என்ற பதிவுக்கு.


இன்ஸ்டண்ட் காபி பொடியில் காபி கலக்க:

முதலில் தேவையான பொடியை போட்டு
1/4 கப் தண்ணீர் சேர்த்து கலந்து
அவனில் 40 செகண்ட்ஸ்
வைக்கவும்.

பிறகு சர்க்கரை, பால் சேர்த்து கலந்து
மேலும் 20 நொடிகள்
வைக்கவும்.

1 நிமிடத்தில் காபி ரெடி. வெளியே
எடுக்கும் போதே வாசனை ஊரைக்கூட்டும்.



டிகாஷனில் காபி மைக்ரோ அவனில்.

டிகாஷன், சர்க்கரை, பால் இவைகளை கப்பில்
ஊற்றி கலந்து 1 நிமிடம் வைத்து எடுத்தால்
சுடச்சுட காபி ரெடி.

(முன்பே சொல்லியிருப்பது போல் திரவ பதார்த்தங்களை
வெளியே எடுக்கும் போது முகத்தை அருகில் கொண்டு
செல்லாதீர்கள்)

மைக்ரோ அவனில் சாம்பார்

மைக்ரோ அவனில் சாம்பார் செய்தால் சுவையும்
ருசியும் சூப்பராக இருக்கும்.


பருப்பை அவனில் வைத்தால் குறைந்தது 20 நிமிடம்
ஆகும். கரண்ட் வேஸ்ட். குக்கரில் வேகவைத்துக்
கொள்ளவும்.

எலுமிச்சை அளவு புளி 2 டம்பளர் நீரில் ஊற வைத்து
கறைத்து வைத்துக்கொள்ளவும்.

சாம்பார் பொடி 1 1/2 ஸ்பூன்.

உப்பு தேவையான அளவு.

கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

ந.எ. 1 ஸ்பூன் (தாளிக்க)

வெங்காயம் - 1 நீள் வாக்கில் அரிந்தது.


a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_T6bXrLLd-NOJnr9Alxv6G7F7TriuRl9hVYGnKcjtYyKth_vvPmEn2VWBEWgfmCebwD892v8d0l7yVZJYpdBPg1e1KYBoOneD4T8EvdNB9qi8T74S0lz9lAakUqsNB-TeK379X4Rc2F8/s1600-h/sambhar.bmp">

செய்முறை:

மைக்ரோ அவன் பாத்திரத்தில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு
போட்டு மூடி 2 நிமிடம் வைக்கவும்.

தாளித்து முடிந்ததும் வெளியே எடுத்து
கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து
பிரட்டி 3 நிமிடம் வைக்கவும்.

வெளியே எடுத்து உடன் சாம்பார் பொடி,
உப்பு சேர்த்து பிரட்டவும்.

கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீர்
சேர்த்து அவனில் 5 நிமிடம் வைக்கவும்.

5 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து
வேக வைத்திருக்கும் பருப்பை சேர்த்து
மேலும் 3 நிமிடம் வைத்து எடுக்கவும்.

சுவை, மணம் மிக்க சாம்பார் ரெடி.

காய் சேர்க்க விரும்பினால்:

தேவையான காய்களை 1 ஸ்பூன்
தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கொஞ்சம் உப்பு
சேர்த்து பிசிறி 2 நிமிடம் வைக்கவும்.

சாம்பாருக்கு பருப்பு சேர்க்கும் பொழுது
வேகவைத்து வைத்திருக்கும் காய்கறியையும்
சேர்த்து கலக்கி வைத்தால் போதும்.

Thursday, September 25, 2008

மைக்ரோ அவனில் வெங்காயச் சட்னி.



இட்லி,தோசைக்கு இணையான ஜோடி தக்காளி
வெங்காயச் சட்னிதான். தேங்காய்ச் சட்னியுடன்
ஒப்பிடும் பொழுது இதில் கொழுப்புச் சத்து குறைவு.
இதனாலேயெ டயட்டில் இருப்பவர்களும் இதை
விரும்புகிறார்கள்.


காலை அவசரத்தில் தக்காளி, வெங்காயம்
வதக்கிக்கொண்டு இருக்க நேரம் இருக்காது.
அப்போது மைக்ரோ அவனில் செய்வேன்.
அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


INGREDIENTS பட்டியல் பெரிய வெங்காயம் - 2 ( நீளவாக்கிலோ, பொடியாகவோ அரிந்து கொள்ளவும்), தக்காளி - 1, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 1/2 ஸ்பூன்,


மேற்சொன்னவை எல்லாவற்றையும் கலந்து
மைக்ரோ அவன் பாத்திரத்தில் போட்டு 5 நிமிடங்கள்
வைத்தால் நன்கு வதங்கிவிடும். நடுவில் ஒரு
முறை வெளியே எடுத்து திருப்பி விடவும்.
சூடு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அடித்தால்
சட்னி ரெடி.

உளுத்தம் பருப்பு சேர்த்து செய்யும் சட்னிக்கு கூட
முதலில் எண்ணெய் விட்டு அதில் உ.பருப்பு சேர்த்து
2 நிமிடம் வைக்கவும். பிறகு தக்காளி வெங்காயம்,
மிளகாய் சேர்த்து மேலும் 4 நிமிடங்கள் வைத்து
ஆறியதும் அரைக்கலாம்.

சுலபாமனது. செய்து பார்த்து சொல்லுங்கள்>

Monday, September 8, 2008

சேமியா உப்புமா செய்யலாமா?

மைக்ரோ அவனில் சேமியா உப்புமா செய்வது எப்படின்னு
பார்க்கலாம் வாங்க.






INGREDIENTS பட்டியல் வறுத்த சேமியா - 2 கப், நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1, பச்சை மிளகாய்- 1 நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்,
கறிவேப்பிலை கொஞ்சம், தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணெய். சுடு தண்ணீர் - 2 கப், உப்பு தேவைக்கேற்ப



1. மைக்ரோ வேவ் பாத்திரத்தில் தாளிக்க கொடுத்திருக்கும்
சாமான்களை சேர்த்து மூடி 3 நிமிடம் வைக்கவும்.
(மூடாமல் வைத்தால் கடுகு, எண்ணெய் ஆகியவை தெளித்து
அவனை சுத்தமாக துடைக்க வேண்டியது ஆகும்)

2. எடுத்து வெங்காயம் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள்
வைக்கவும்.

3.வறுத்த சேமியா, சுடு தண்ணீர், உப்பு சேர்த்து
நன்கு கலக்கி 5 நிமிடங்கள் மைக்ரோ ஹையில்
வைக்கவும்.

4. எடுத்து ஒரு முறை நன்கு கிளறி தேவையெனில்
மேலும் 2 நிமிடங்கள் வைக்கவும்.

சேமியா உப்புமா ரெடி.

Wednesday, September 3, 2008

1 நிமிட் போதும்.

மாகி நூடுல்ஸ் செய்யக் கூட ரெண்டு நிமிடம் தேவை.

நாம் 1 நிமிட்ல அப்பளம் சுடலாம் அல்லது
காபி/டீ கலக்கலாம்.





அப்பளத்தை (லிச்சத் பாபட், உளுந்து அப்பளம்,
அரிசி அப்பளம் ஏன் வடக வகைகள் கூட) மேலே சொல்லியிருப்பது
போல் வைத்து 1 நிமிடம் அல்லது அதற்கும் குறைவான
நேரத்தில் வைக்கவும்.

நடுவில் அவனை நிறுத்தி அப்பளத்தை மறுபுறம்
திருப்பிவிடவும்.



இதோ அப்பளம் ரெடி.





இனி உங்களுக்கு ஏதாவது சாப்பிடவேண்டும் என்று
தோன்றும் போதெல்லாம் அப்பளத்தை சூட்டு,
நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி
தூவி எலுமிச்சை ரசம் கொஞ்சம் மேலே பிழிந்து
மசாலா பாப்பட் செய்து கொள்ளலாம்.

இதோடு சூடாக பிளாக் டீ இருந்தால்
சூப்பராக இருக்கும்ல.



அதுவும் 1 நிமிடத்தில் செய்யலாம்.




படத்தில் இருப்பது போல்
எந்த டிசைன் (சில்வர் கோட்டிங் போன்றவை)
இல்லாத கப்பில் தண்ணீர் வைத்து அவனில்
1 நிமிடம் வைக்கவும்.

எடுத்து டீ பேக், சர்க்கரை சேர்த்தால் டீ ரெடி.

காபி தான் வேணும் என்று நினைத்தால்

டிகாஷன்/ இன்ஸ்டண்ட் தூள் பால், சர்க்கரை
கல்ந்து அவனில் 1 நிமிடம் வைத்தால் காபி
ரெடி.

(மிக முக்கியமான விடயம் பால், தண்ணீர்
சுட வைத்து வெளியே எடுக்கும் பொழுது
முகத்தின் அருகே கொண்டு செல்லாதீர்கள்.
தண்ணீர் முகத்தில் தெளிக்கும் அபாயம்
உள்ளது)

Tuesday, September 2, 2008

மைக்ரோ அவனில் பொரியல் செய்வது எப்படி?

காலை நேர அவசர சமையலுக்கு ஆபத்பாந்தவனாய்
கை கொடுப்பது அவன் (மைக்ரோ அவனைச் சொன்னேன்)
தான்.







பீன்ஸ் பொரியல் செய்வது எப்படின்னு பார்ப்போம்.
தேவையான சாமான்கள் நாம் சாதாரணமாக
பீன்ஸ் பொரியலுக்கு உபயோகிக்கும் சாமான்கள் தான்.

பீன்ஸை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

மைக்ரோ வேவ் பாத்திரத்தில் கடுகு, உளுத்தம்பருப்பு,
மிளகாய் தாளித்து வெளியே எடுத்து நறுக்கிவைத்திருக்கும்
பீன்ஸை சேர்த்து பிரட்டி 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து
4 நிமிடங்கள் வைக்கவும்.

எடுத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கி, தேங்காய்த்துருவல்
சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வைத்தால்
பொரியல் ரெடி.




பீன்ஸ் பொரியல் மாதிரி தான் பீட் ரூட் பொரியலும்.

(மைக்ரோ வேவில் காய்களை வேகவைப்பதால்
சத்து வீணாகாமல் கிடைக்கிறது. குக்கரில்
வேகவைத்து தண்ணீரை கொட்டிவிடுகிறோம்.
இங்கே குறைவான தண்ணீர், சத்தும் அப்படியே
கிடைக்கிறது.)


உருளைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்து அவதிப்பட
தேவையில்லை.

தோலை சீவி வேண்டிய சைஸில் கட் செய்து
காரம், மஞ்சள், உப்பு கலந்து அவனில் வைத்தால்
5 நிமிடத்தில் உருளை வறுவல் ரெடி.


செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க.

Sunday, August 31, 2008

மைக்ரோ வேவ் சமையல்



மைக்ரோ வேவில் சமைப்பது சுலபம்.
( மைக்ரோ வேவ் பாத்திரம் தேய்ப்பதும் தான் :))))

மைக்ரோ வேவ்
விக்கிப்பீடியா தகவல்களுக்கு.

மைக்ரோ வேவ் எப்படி வேலை செய்கிறது?
போன்ற மற்ற தகவல்களுக்கு.

மைக்ரோ வேவில் சூட வைப்பது மட்டுமல்ல
சூப்பரா நமது இந்திய சமையலும் செய்யலாம்.
(துளசி டீச்சர் பதிவுகளில் பார்த்திருப்பீங்க)

எனக்குத் தெரிந்த சில மைக்ரோ வேவ்
சமையல் குறிப்புகளை உங்களுக்குத்
தரப்போகிறேன்.

இனிப்போடு ஆரம்பிக்கலாமா?

தேங்காய் பர்பி:


INGREDIENTS பட்டியல் தேங்காயத் துருவல் - 1 கப், சர்க்கரை - 1 கப், நெய் 1 ஸ்பூன், ஏலப்பொடி கொஞ்சம்.





மைக்ரோ வேவ் பாத்திரத்தில் தேங்காய்த் துருவல்,
சர்க்கரை, நெய் கலந்து 3 நிமிடம் வைக்கவும்.

3 நிமிடத்திற்கு பிறகு எடுத்து கொஞ்சம் ஏலப்பொடி
சேர்த்து கலக்கி மேலும் 3 நிமிடங்கள் வைக்கவும்.

எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள்
போட்டால் பர்பி ரெடி.

( வைக்கும் நேரம் அவனின் அளவைப் பொறுத்தும்
வாட்ஸைப் பொறுத்தும் மாறும் )






Saturday, August 9, 2008

தவல அடை

பேரைப் பார்த்து பயந்து விடாதீர்கள். இது சைவ உணவுதான்.
வைகை எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்யும் பொழுது
விற்றுக்கொண்டு வருவார்களே சாப்பிட்டிருக்கிறீர்களா?


மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த டிபன் சூப்பரா இருக்கும்.

இதை இரண்டு விதமாக செய்யலாம்.

INGREDIENTS தேவையான பொருட்கள்:

அரிசி : 2 கப்

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு,
உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு எல்லாம் கலந்து :2 கப்

சீரகம், மிளகு 1 ஸ்பூன். மிளகாய் வற்றல் : 5

பட்டியல்


மேற்சொன்ன அனைத்தையும் ஊற வைத்து கரகரவென்
அரைத்து எண்ணையில் கரண்டியால் எடுத்து ஊற்றி
ப்ரவுன் நிறத்தில் பொறித்து எடுக்கலாம்.

எண்ணையில் பொறிக்க பயமாக இருக்கும்
கலோரி கான்சியஸ் காரர்கள் இவ்வாறு செய்யலாம்.

கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில்
டிரையாக ரவைபோல் பொடித்துக் கொள்ளவும்.

அடி கணமான பாத்திரத்தில் எண்ணைய் ஊற்றி
கடுகு, கறிவேப்பிலை தாளித்து 1 பங்கு ரவைக்கு
2 பங்கு தண்ணீர் விட்டு கொதித்ததும் உப்பு
சேர்த்து, பொடித்து வைத்திருக்கும் ரவையையும்
சேர்த்து உப்புமாவாக கிளறவும்.10 நிமிடம்
சிம்மில் வைத்து வெந்ததும் அடுப்பை அணைத்து
விடவும்.

செய்து வைத்திருக்கும் உப்புமாவை உருண்டைகளாக
செய்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து உருட்டி வைத்திருக்கும்
உருண்டைகளை வட்டமாகத்தட்டி, நடுவில் ஓட்டை
செய்து அதை வாணலியில் போட்டு, 1 ஸ்பூன்
எண்ணைய் எடுத்து நடுவில் கொஞ்சம், சுற்றி
கொஞ்சம் விட்டு மூடி வைக்கவும்.

பிறகு மறுபுறமும் திருப்பி மூடி வைக்கவும்.
சுட்டதும் சுடச்சுட சாப்பிடலாம்.

தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி, கொத்சு
சாம்பார் எதுவும் ஓகே தான்.

Tuesday, July 29, 2008

கமகம கத்தரிக்காய்


தமிழ் உணவுக்கே உரியதான ஒரு சில காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. சாம்பாரில் முக்கிய இடம்பெறுவது மட்டுல்லாமல் அவியல்,பொரியலுக்கும் ஏற்றது. கத்தரிக்காய் கொண்டு செய்யப்படும் சில உணவுவகைகள்...

கத்தரிக்காய் சட்னி

கத்தரிக்காய் - 2 பெரியது
பச்சை மிளகாய் - 6
கொத்துமல்லி தழை- 1 கொத்து
புளி - 1 எலுமிச்சை அளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு

தாளிதம்:
எண்ணெய், கடுகு, வற்றல்

1.கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அல்லது நீர் சேர்க்காமல் எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.

2. வேகவைத்த கத்தரிக்காய் ஆறியபின் பச்சைமிளகாய், புளி, உப்பு, பெருங்காயம், கொத்துமல்லி இலையுடன் சிறிதளவு நீர்விட்டு மிக்சியில் அரைத்து எடுக்கவும்.

3. அரைத்த விழுதை தாளிதம் செய்க.

சப்பாத்தி, இட்லி, தோசைக்கு சுவையான தொட்டுகையாக கத்தரிக்காய் சட்னி தயார்.

மசாலா கத்தரிக்காய்

கத்தரிக்காய் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 3
புளி - சிறு எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் - 1 கப்
எண்ணெய்
உப்பு


தாளிதம்:
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு

கத்தரிக்காய்களை கழுவி காம்பு நீக்கி நான்காய் கீறிக் கொள்ளவும்

புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து, தேங்காய் துருவல், அரிந்த வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு தாளிதம் செய்து புளிக் கலவையை கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் கலவையை எடுத்து கீறிய கத்தரிக்காய்களுக்குள் நிரப்பவும்.

வாணலி அல்லது பிரைபேனில் எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை அடுக்கி வைக்கவும். மீதமுள்ள மசாலா கலவையை அதன்மீது கொட்டி மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும். சிறிது நேரம் கழித்து கத்தரிக்காய்களை திருப்பி போடவும். எல்லாப் பக்கங்களும் வெந்தபின் எடுத்தால் அனைத்துவகை சாதத்துக்கு ஏற்ற சுவையான மசாலா கத்தரிக்காய் தயார்.

கத்தரிக்காய் கொத்சு

கத்தரிக்காய் - 4
சின்ன வெங்காயம் - 1 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
வற்றல் மிளகாய் - 6
மல்லி - 3 கரண்டி
கடலைப் பருப்பு - 3 கரண்டி
நல்லெண்ணெய் - 100 மிலிகிராம்
உப்பு

வற்றல் மிளகாய்,மல்லி, கடலைப் பருப்பை வறுத்து மிக்சி அல்லது உரலில் பொடித்துக் கொள்ளவும்.

புளியை சிறிது தண்ணீரில்கரைத்து புளிக்கரைசல் எடுத்துக்கொள்ளவும்.

சிறிய துண்டுகளாக நறுக்கிய கத்தரிக்காய், தோல் நீக்கிய வெங்காயம் ஆகியவற்றை சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி அதில் புளித் தண்ணீரை விட்டு வேகவைக்கவும். பொடித்து வைத்த மசாலாவை அதில் கொட்டி கிளறவும். அரை கப் நல்லெண்ணெயை அதில் ஊற்றி மூடி வைக்கவும்.

இட்லி, தோசை, சப்பாத்திக்கு மிகச்சிறந்த தொட்டுகை.

கத்தரிக்காய் தொக்கு

கத்தரிக்காய் - 4
பெரியவெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
கெட்டியான புளிக்கரைசல் - அரை கப்
பூண்டு - 4 பல்
பெருங்காயப்பொடி - கால் கரண்டி
நல்லெண்ணெய் - 100 மில்லி
மஞ்சள்தூள் - அரை கரண்டி
மிளமாய்த்தூள் - 1 கரண்டி
உப்பு

தாளிதம்:
வற்றல்மிளகாய், கடுகு, கறிவேப்பிலை

கத்தரிக்காயை குக்கர் அல்லது இட்லிப் பாத்திரத்தில் நீராவியில் வேக வைக்க வேண்டும். வெந்து ஆறியபின் தோல் நீக்கி மத்தினால் கடைந்து, அல்லது கையால் பிசைந்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு,பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிதம் செய்தபின் நறுக்கிய காய்களை சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின் புளிக் கரைசலையும் மசித்து வைத்த கத்தரிக்காயையும் சேர்த்து கிளறவும்.

வெஜிடபிள் பிரியாணி, அனைத்து வகை சாதங்கள், தனிச்சோறு உட்பட அனைத்துக்கும் ஏற்ற தொட்டுகை இது.

அவல் ரெசிப்பி.




கார்மேக வண்ணன் கண்ணனுக்கு பிடித்தது.
கிருஷ்ணாஷ்டமிக்கு எது செய்தாலும் செய்யாவிட்டாலும்,
இது கண்டிப்பாய் இடம்பெரும் நைவேத்தியம்.

நம் உடம்புக்கும் நல்லது. டயட்டில் இருப்பவர்கள்
கூட சாப்பிடலாம்.

எப்பவும் போல் தேங்காய் அவல், தயிர் அவல், புளிஅவல்
தானா? செய்யற நமக்கே அலுப்பா இருக்கும்ல.

அதான் எனக்குத் தெரிந்த சில ரெசிப்பிக்களை
உங்களுக்கு சொல்ல வந்தேன்.

அவலை ஹிந்தியில் போஹான்னு சொல்வாங்க.
உருளைக்கிழங்கு போஹா, மசலா போஹா,
சிம்பிள் போஹா இதுதான் நாம் பார்க்கப்போகும்
ரெசிப்பிக்கள்.

முதலில் படாடா போஹா(உருளைக்கிழங்கு அவல்)
தேவையான சாமான்கள்:

கெட்டி அவலோ, சன்ன அவலோ எது கிடைக்குதோ
அது - 2 கப்,

வேகவைத்த உருளைக்கிழங்கு - 2

பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் - 1 கப்

இஞ்சி - 1 துண்டு

பச்சை மிளகாய் - நீளவாக்கில் கீறியது - 2

கொத்தமல்லி தழை கொஞ்சம்,

கறிவேப்பிலை - கொஞ்சம்,

கடுகு, சீரகம் - 1/2 ஸ்பூன்,

மஞ்சள் தூள், உப்பு தேவைக்கேற்ப,

தாளிக்க - 1ஸ்பூன் எண்ணைய்.

எலுமிச்சை ரசம் - 1 ஸ்பூன்

செய்முறை:
கெட்டி அவலாக இருந்தால் கழுவி ஒரு நிமிடம்
வைக்கவும். (சன்ன அவலாக இருந்தால்
1 ஸ்பூன் நீரூற்றி பிசறிக்கொள்ளவும்)

அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணைய்
விட்டு முதலி இஞ்சி, பச்சைமிளகாய் கறிவேப்பிலை,
வதக்கி அதன் பிறகு கடுகு, சீரகம் தாளித்து
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், வேகவைத்துள்ள
உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு போட்டு
வதக்கவும்.

பிறகு கழுவி வைத்திருக்கும் அவலையும் சேர்த்து
நன்கு கலக்கவும்.

இறக்கிவைத்து எலுமிச்சை ரசம் சேர்த்து
கலக்கி மேலே கொத்தமல்லி தூவினால்
ஸ்ஸ்ஸ்ஸ்... போஹா ரெடி.

ப்ரேக் பாஸ்ட், டின்னர் எதுக்கும் பொருந்தும்.

தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி போதும்.



மசாலா போஹா:

தேவையான சாமன்களில் பச்சை மிளகாய்,இஞ்சிக்கு பதில்
1 ஸ்பூன் கரம் மசாலா.

செய்முறை அதேதான்.

சிம்பிள் போஹா:

அவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
பொட்டுக்கடலை (அதாங்க ஒட்சக் கடலை)
தேங்காய்த் துருவல் 1 ஸ்பூன், உப்பு.

பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய்
மூன்றையும் மிக்சியில் சற்று கரகரப்பாக
பொடித்துக்கொள்ளவும். ( நோ வாட்டர். ஒன்லி
பவுடர் :) )

வாணலியில் எண்ணைய் விட்டு, கடுகு தாளித்து
கறிவேப்பிலை சேர்த்து கழுவி வைத்திருக்கும்
அவலையும் உப்பையும் சேர்த்து வதக்கவும்.

செய்து வைத்திருக்கும் பொடியை மேலே
தூவி கொஞ்சம் பிரட்டி இறக்கி வைக்கவும்.

தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம்.
விரும்புகிறவர்கள் கொஞ்சம் தயிர் சேத்து
அப்படியே சாப்பிடலாம்.

(பிள்ளைகள் மிகவும் விரும்புவார்கள் இந்த
போஹா வகைகளை.)

இன்னுமொரு ரெசிப்பிக்கு இங்கே..

Friday, July 25, 2008

உடலுக்கு ஒரு ஏர் கண்டீஷனர்.



வெந்தயம் இதன் மருத்துவ நலன்களை நான்
சொல்லத் தேவையில்லை.

மேலதிக தகவல்களுக்கு இங்கே - விக்கிப்பீடியா.


முடிந்த போதெல்லாம் வெந்தயத்தை நமது
சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது.

சாம்பார்,குழம்பு வகைகளுக்கு வெந்தயம் தாளித்தால்
வாசனை ஊரைத் தூக்கும்.
(வாயில் தட்டுப்படும் வெந்தயம் கசப்பை கொடுப்பதால்
பலர் விரும்ப மாட்டார்கள்.)

சரி இப்போது வெந்தயக் கீரை ரெசிப்பி சில பார்க்கலாம்:

ஆலு மேத்தி - வெந்தயக்கீரை + உருளைக்கிழங்கு வறுவல்.


இது ரொம்ப சிம்பிள் முறை:


தேவையான சாமான்கள்:

உருளைக்கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து தோலுரித்துக்
கொள்ளவும்)

கசூரி மேத்தி - உங்களுக்கு விருப்பமான அளவு.
(பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கசூரி மேத்தி
கிடைக்கும்)

உப்பு, மஞ்சள் தூள், காரத்தூள் அல்லது கரம் மசாலா
தேவையான அளவு.

செய்முறை:

அடுப்பை பற்றவைத்து வாண்லியில் 1 ஸ்பூன்
எண்ணைய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.

வேகவைத்த உருளைக்கிழங்கை அதில் போட்டு
உப்பு, மஞ்சள், காரம் சேர்த்து கிளறவும்.

கொஞ்சம் வதங்கியதும் இரக்கி வைத்து
கசூரி மேத்தி சேர்த்து வாணலி சூட்டிலேயே
பிரட்டவும்.

ஆலூ மேத்தி ரெடி.

விரும்பினால் தாளித்தபின் 2 தக்காளி
வெட்டி சேர்க்கலாம்.





மேத்தி பராத்தா:
நாம் சாதரணமாக சப்பாத்திக்கு மாவு பிசைவது போல்
பிசைந்து அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் விரும்பினால்
கொஞ்சமாக கரம் மசாலா சேர்க்க வேண்டும்.

முக்கியமாக கசூரி மேத்தி வேண்டிய அளவு சேர்த்து
பிசைந்து இரு புறமும் எண்ணைய் விட்டு
சுட்டு எடுத்தால் மேத்தி பராத்தா ரெடி.

இதிலேயே தண்ணீருக்கு பதில் புளிக்காத
தயிர் சேர்த்து பிசைந்தால் மேதி தேப்லா.

( 4 நாள் வரை கெடாது)





வெந்தயக்கீரை சாம்பார்:

செய்வது சுலபம். வெங்காயம் இல்லாமல் சாம்பார் செய்ய
என்னென்ன தேவையோ அந்த பொருட்களே போதும்.

குழம்பில் போடப்படும் காய்க்கு பதில் வெந்தயக்கீரை.

சரி செய்முறை எப்படின்னு பார்த்திடலாமே!


குழம்பு செய்யும் பாத்திரத்தில் 1 கரண்டி தண்ணீர்
விட்டு அது கொதித்ததும் சுத்தம் செய்து வெட்டி
வைத்துள்ள வெந்தயக்கீரையை போடவும்.

கீரை முக்கால் பாகம் வெந்ததும் புளிக்கரைசல்
ஊற்றி கொதிக்க விடவும்.

மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி
சேர்த்து கொதிக்க விடவும்.

பொடி வாசனை போனதும் வேக வைத்துள்ள
பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

நல்லெண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்போடு,
கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய் கீறி
தாளித்து கொதிக்கும் குழம்பில் கொட்டி
பரிமாறவும்.




நம் உடல் சூட்டை தடுக்கும் வெந்தயம்.

வெந்தயம் நம்மை வெந்து போகாமல் காக்கும் அருமருந்து.

Tuesday, July 15, 2008

பூண்டுக் குழம்பு, பூண்டு ரசம்



பூண்டு மிக நல்லது. அரு மருந்து.

நம் உடம்பை சுத்தப்படுத்துவதில் பூண்டு பெரும்பங்கு
வகிக்கிறது. வாரம் ஒரு முறை பூண்டை சமையலில்
சேர்த்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.

மிளகின் குணத்தை பற்றி சொல்ல ஒரு பழைய சொலவடை
போதும். ”4 மிளகை கையில் எடுத்துக்கொண்டு எதிரி
வீட்டில் கூட சாப்பிட போகலாம் ”என்பார்கள்.

விஷத்தை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.
பூச்சிக்கடி போன்ற எந்த விஷக்கடிக்கும் முதலில்
மிளகைத்தான் திங்கக் கொடுப்பார்கள்.

நாம் முதலில் பார்க்கப்போவது பூண்டு,மிளகு ரசம்.

செய்வது எளிது.

தேவையான சாமான்கள்:

4 பல் பூண்டு, தக்காளி 2, மிளகு 1/4 ஸ்பூன்,
சீரகம் 1/4 ஸ்பூன், எண்ணைய் 1 ஸ்பூன்,கடுகு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி கொஞ்சம்,
உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்ப.

செய்முறை:
பூண்டு பல், மிளகு சீரகத்தை முதலில் மிக்ஸியில்
போட்டு பொடிக்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து
சுற்றினால் நன்கு பேஸ்டாக வரும்.

அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணைய்
1 ஸ்பூன் சேர்த்து சூடானதும், கடுகுதாளித்து,
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அத்துடன்
அரைத்து வைத்துள்ள தக்காளி, பூண்டு பேஸ்டை
சேர்த்து நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு
கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை
சேர்த்தால் ரசம் ரெடி.

இதை சூப்பாகவும் குடிக்கலாம்.



பூண்டு, மிளகுக் குழம்பு.




தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
மிளகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
தக்காளி 1/4 கிலோ.
தேங்காய் துருவல் அல்லது கொப்பரைத்தூள் 1 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்,
தனியாத்தூள் 1 ஸ்பூன்
ந.எ - 1 ஸ்பூன்,
உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்ப.

செய்முறை:
பூண்டை உரித்து கொள்ளவும்.

சின்ன வெங்கயாத்தையும் நன்கு உரித்துக்கொள்ளவும்,

வெறும் வாணலியை அடுப்பில் வைத்து
அதில் மிளகு சீரகம் போட்டு வெடிக்கத் துவங்கியதும்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து பிரட்டி
அடுப்பை அனைக்கும் முன் தேங்காய்த்துருவல்
சேர்த்து ஆற விட்டு மைய பேஸ்டாக
அரைத்துக்கொள்ளவும்.

தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

குக்கரில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும்
கடுகு, கறிவேப்பிலை தாளித்து
பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளியையும் சேர்த்துவதக்கி,
அரைத்துவைத்துள்ள பேஸ்டையும் போட்டு,
உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 1 கிளாஸ்
தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வெயிட் போடவும்.

3 விசிலுக்கு பிறகு இறக்கி ஆற வைத்து
திறந்தால் கம கமக்கும் பூண்டு, மிளகுக்குழம்பு ரெடி.

Tuesday, January 15, 2008

சக்கரைப்பொங்கலும், வெண் பொங்கலும்.

முதல்லே ஒரு சந்தேகம் வந்து எட்டிப்பாக்குது. சக்கரைக்கு எதிர்ப்பதம்ன்னு சொன்னா உப்புதானே? இல்லை என்று சொல்பவர்கள் கவிஞர் எழுதுனதைக் கவனிக்கவும்.

"உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?"

வெண் பொங்கல்னு நிறத்தை வச்சுச் சொல்லும்போது,மற்றதை பிரவுண் பொங்கல்னு ஏன் சொல்லலை?

இனிப்புப் பொங்கலும் உப்புப் பொங்கலும் சொன்னால் ஆகாதா?

ஏன், எப்படின்னு உக்கார்ந்து யோசிக்கவும். அடுத்த பொங்கலுக்கு இன்னும் ஒரு வருசம் இடைவெளி இருக்கு.


சக்கரை என்ற இனிப்புப்பொங்கல் : (துளசியின் இஷ்டைலு)

அதுக்கு முன்னால் ஒரு டிஸ்கி போட்டுக்கறேன். ( டிஸ்கி என்பது தமிழ்ச்சொல். மேல்விவரம் கொத்ஸ் தருவார்)

ஹெல்த் நட்ஸ்கள் இந்தப் பக்கம் வரவேண்டாம்.


தேவையான பொருட்கள்:

அரிசி: 1 கப்

கடலைப்பருப்பு: கால் கப்

பாசிப் பருப்பு : கால் கப்

பால்: ஒன்னரைக் கப்

முந்திரிப்பருப்பு :25 ( மங்களூர் சிவா 18ன்னு சொன்னப்பச் சும்மா இருந்தீங்க?)

உலர்ந்த திராட்சை( சுல்த்தானா): 2 மேசைக் கரண்டி

நெய்: அரைக் கப்

கோல்டன் சிரப்: 1 கப் ( வெல்லப்பாகுதான். டின்லே வருது)

தேங்காய் துருவியது: அரைக் கப்.( நான், டெஸிகேட்டட் தேங்காய்(தான்) போடுவேன்)

ஜாதிக்காய் : பொடிச்சது 1 சிட்டிகை

ஏலக்காய்: 4 ( உரித்தோ உரிக்காமலோ ஒரு தட்டு தட்டி எடுத்துக்கொள்ளணும்)

கிராம்பு : 5

பட்டை: ஒரு துண்டு( ரெண்டு இஞ்சு நீளத்தில்)

பச்சைக் கற்பூரம்: கால் சிட்டிகை

செய்முறை:

வெறும் வாணலியில் கடலைப்பருப்பை வாசனை வரும் வரை கருக்காமல் வறுத்துக்கொள்ளணும். அதை ஒரு தட்டில் போட்டுவிட்டு அதே வாணலியில் பாசிப்பருப்பையும் இதே போல மணம் வரும்வரை வறுத்து எடுக்கணும்.

அரிசி, க & பா. பருப்புகளைச் சேர்த்து நன்றாக மூன்று முறை களைந்து எடுத்து( இந்தியர்களுக்கு அடையாளமாம் மூணு முறை கழுவறது)ஒரு குக்கர் பாத்திரத்தில் போட்டுப் பாலும், ரெண்டு கப் தண்ணீரும் சேர்த்து மூணு விசில் வரை அடுப்பில் வச்சு எடுத்துக்கணும்.

கொஞ்சம் பெரிய வாணலியை அடுப்பில் வைத்துக் கொஞ்சம் நெய் ஊற்றி மு. பருப்பு & திராட்சையைப் பொரிச்சு எடுத்துத் தனியா வச்சுக்கணும்.அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துப் பட்டை, கிராம்புகளை லேசாப் பொரிச்சுட்டு, ஜாதிக்காய் தூளைத் தூவணும்.அடுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து வறுக்கணும்( இந்த சமயங்களில் அடுப்பு சிம்லே இருக்கணும். தீவட்டியா தீவச்சுக் கருக்கிடாதீங்கப்பு) அடுத்து, வெந்த அரிசி பருப்புக் கலவையை இதில் சேர்த்துக் கிளறிக்கிட்டே அந்த கோல்டன் சிரப்பை ஊத்துங்க.

மீதி இருக்கும் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக் கிளறனும். நல்லா எல்லாம் ஒண்ணோடொண்ணு சேர்ந்து நிறம் எல்லாம் ஒண்ணுபோல இளம் மஞ்சள்/பிரவுண் ஆனதும் ஏலக்காய், பச்சைக்கற்பூரம் சேர்த்து இளக்கிட்டு, முந்திரி & சுல்த்தானா வையும் சேர்த்துக்கிளறி ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சுக்கலாம்.



இப்ப வெண் பொங்கலைப் பார்க்கலாம்.

அரிசி : 1 கப்
பாசிப் பருப்பு: காலே அரைக்கால் கப்( 1/3 கப்ன்னு ஒரு அளவுக்கிண்ணம் கிடைக்குது!)

நெய்: 1/3 கப்

உப்பு: ஒரு தேக்கரண்டி

மிளகு: ஒரு தேக்கரண்டி

சீரகம்: ஒரு தேக்கரண்டி

பெருங்காயத்தூள்: ரெண்டு சிட்டிகை

இஞ்சி: துருவியது : ஒரு தேக்கரண்டி

கருவேப்பிலை: ஒரு இணுக்கு

முந்திரிப்பருப்பு: 20

வெறும் வாணலியில் பாசிப்பருப்பை மணம் வர வறுத்துக்கணும். அரிசி பருப்பைச் சேர்த்துக் கழுவிக்களைந்து(3) நாலரைக் கப் தண்ணீர் சேர்த்து அதே குக்கர் & அதே 3 விஸில். ஆச்சா?

பெரிய வாணலியில் நெய் சேர்த்து முந்திரியைப் பொன்நிறமாக வறுத்து எடுத்துத் தனியே வச்சுக்கணும். இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து மிளகு & சீரகம் பொரிச்சுட்டு அதிலேயே பெருங்காயம், இஞ்சி & கருவேப்பிலை, உப்பு சேர்த்து நல்லா மணம்வரும்வரை வதக்கிட்டு, குக்கரில் வெந்ததைப் போட்டுக் கிளறணும். அப்பப்ப நெய். ஒரு மூணு, நாலு நிமிஷம் கிளறிட்டுக் கடைசியில் வறுத்த முந்திரியைச் சேர்த்து ஒரு கிளறல்.
அவ்வளவுதான். பாத்திரத்தில் எடுத்து வச்சால் ஆச்சு.


வேலையை எளிதாக்க:

ரெண்டு பொங்கலுக்கும் உள்ள பாசிப்பருப்பை ஒரேதா வறுத்துட்டுப் பாகம் பிரிக்கலாம். முந்திரியையும் வறுத்துட்டு எடுத்து வச்சுட்டு, இதுக்கும் அதுக்குமா எடுத்து வச்சுக்கலாம்.

மிளகை முழுசாப்போட்டால் பசங்க அதைத் தனியா எடுத்துக் கடாசுதுங்கன்னு கவனிச்சது முதல், மிளகு சீரகத்தை ஒண்ணுரெண்டா உடைச்சுப் போட்டுருவேன்.( இப்ப என்ன செய்வீங்க?)

இதே போலத்தான் இஞ்சியை எடுத்து வீசுதுங்கன்னு அதையும் துருவிப்போடறது.

நல்ல மணமுள்ள நெய் வேணுமுன்னா, இங்கே கிடைக்கும் வெண்ணெய்(அதாங்க சூப்பர் மார்கெட்டில் டெய்ரி செக்ஷனில் கிடைக்கும் உப்பு சேர்த்ததும் வாங்கலாம்) ஒரு அரைக்கிலோ கட்டி வாங்கி உருக்குனா ஆச்சு. கமகம....

நெய் மீந்து போனா வீட்டுக்காச்சு. பருப்பு சாதம், பொடிவகைக்குச் சேர்த்துக்கலாம். நெய்வாசம் எனக்குப் பிடிக்கும். போகவர மூடியைத் திறந்து மணம் புடிச்சுக்குவேன்:-)ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஹாஆஆஆஆஆஆ

நேரம் கிடைக்கும்போது ஆக்கிப் பார்த்துட்டுச் சொல்லுங்க.

இனிய (மாட்டுப்) பொங்கல் வாழ்த்து(க்)கள்.
Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines